உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் காரில் விபத்துக்குள்ளானது தற்செயல்தான் என்றும், அது திட்டமிட்ட கொலை முயற்சி அல்ல என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது. பா.ஜ.க-வின் குல்தீப் சிங் செங்கர் தம்மை அடைத்து வைத்தும் மிரட்டியும் ஓராண்டுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் செங்கரை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே அந்தப் பெண் உறவினர்களுடன் காரில் செல்லும் போது ரே பரேலி அருகே சரக்கு லாரி ஒன்று வேகமாக அந்த கார் மீது மோதியது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த அந்த பெண்ணும் தம்மை கொல்ல முயற்சி நடப்பதாக புகார் அளித்தார். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. முதல் விசாரணை அறிக்கையை சிபிஐ நேற்று பதிவு செய்தது. இதில் குல்தீப் செங்கார் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டு நீக்கப்பட்டுள்ளது. சரக்கு லாரியை ஓட்டி வந்த ஆஷிஷ்குமார் மீது கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குல்தீப் சிங் செங்கார் மீதான கொலை முயற்சி புகார் அடிப்படையற்றது என்றும், அன்று நடைபெற்றது எதிர்பாராத தற்செயலான ஒரு சாலை விபத்துதான் என்றும் சிபிஐ முடிவுக்கு வந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. மீதான கொலை முயற்சி புகார் ரத்து: சிபிஐ அறிக்கை